போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கான அஞ்சலி வாரம், இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் நாளை திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதுடன் அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதியினை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும் எனவும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமெனவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.