சமகால அரசியல் நிலவரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. அதன் போது, பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்களை விஸ்தரித்தாலும் காணி மற்றும் பாதுகாப்பு சார்ந்த அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணத்தை சார்ந்த தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட்ட போதும் அந்த உரிமைகளை தமிழ் அரசியல்வாதிகள் பாதுகாத்துக் கொள்ளவில்லை எனவும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளை, அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது என்றும் அரசியல் மற்றும் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக கூறிக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நாட்டின் அமைதிக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மறக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை காரணம் காட்டி, நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.