பாடசாலை ஆசிரியர்களது ஆடைகள் குறித்த பல்வேறுபட்ட செய்திகளும் அண்மைய நாட்களில் வெளியாகுவதை அவதானிக்க முடிந்தது. அவ்வாறான செய்திகள் மூலம் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் பேசப்பட்டிருந்தது.
இந்நிலையில்,பாடசாலை ஆசிரியைகள் புடவையை தவிர வேறு ஆடைகளை அணிந்து பாடசாலை செல்ல முடியாது என்பதனை அறிவுறுத்தும் சுற்றறிக்கை, அரச நிர்வாக அமைச்சின் மூலம் இன்று வெளியிடப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சில பாடசாலைகளின் ஆசிரியைகள் புடவைக்கு பதிலாக வேறு உடைகளில் கடமைக்கு சென்றுள்ளதாக கடந்த தினங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை கருத்தில் கொண்டே அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியைகள், பாடசாலைகளுக்கு கடமைக்கு செல்லும் போது புடவை அணிந்திருக்க வேண்டும் என்ற கல்வியமைச்சின் கொள்கை ரீதியான முடிவில் எந்தவித மாற்றங்களும் இல்லை எனவும் கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க கூறியுள்ளார்.