இராஜாங்க அமைச்சர்களின் நியமனங்கள் நியாயமானது , ஆனால் அவர்கள் எவருக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கான சிறப்புரிமைகள் வழங்கப்படாது. அவர்கள் எம்.பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் கீழேயே பணியாற்றுவர்கள் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,
ஹர்ஷ டி சில்வா உரையாற்றும் போது இராஜாங்க அமைச்சு நியமனம் பாரிய அநியாயம் என கூறியிருந்தார். இவ்வாறு கூறுவதை மக்கள் செய்திகளில் கேட்கும் போது விரக்தியடைவார்கள். எவ்வாறாயினும் அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பது என்பது நியாயமானது. நியமிக்கப்பட்டிருக்கும் இராஜாங்க அமைச்சர்கள் எவருக்கும் விசேட சிறப்புரிமைகள் கிடைக்காது.
அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் எம்.பிக்களின் சம்பளத்திற்கமையவே பணியாற்ற வேண்டும். அமைச்சரவை அமைச்சர்கள் 18பேரே இருக்கின்றனர். ஒரு அமைச்சருக்கு கீழ் இருக்கும் நிறுவனங்களை அவரால் செயற்படுத்த முடியாது. உதாரணத்துக்கு அமைச்சர் பிரசன்னா ரணதுங்கவுக்கு கீழ்40 நிறுவனங்கள் இருக்கின்றன. அமைச்சர் ரமேஷ் பத்திரணவுக்கு கீழ் 92 நிறுவனங்கள் இருக்கின்றன.
இவ்வாறு இருக்கையில் அவற்றை அவர்களால் பார்க்க முடியாது. இதனால் குறித்த நிறுவனங்களை முறையாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என்றார்.