Saturday 18 March 2023

இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதால் நாட்டை கட்டியெழுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்படும் – மஹிந்த அமரவீர

புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான துரித பணிகளுக்கு பாரிய பங்களிப்பு வழங்கப்படும்.

விசேடமாக இராஜாங்க அமைச்சர்களாக அரசாங்கத்தின் பொறுப்புக்களை நிர்வகித்து, குறித்த இராஜாங்க அமைச்சுடன் நேரடியாக தொடர்புபடுகின்ற அமைச்சுக்கு முழுமையான பங்களிப்பினை வழங்குவதே இராஜாங்க அமைச்சர்களின் பிரதான பணியாகும்  என வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில்,

தற்போது 20 அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களே இதுவரை நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில், அமைச்சர்களின் பொறுப்பில் உள்ளடக்காத ஏனைய அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  பொறுப்பிலேயே இருக்கிறது.

அமைச்சரவை அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த எல்லைக்குள் வராத அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் உள்ளன. உதாரணமாக, ஜனாதிபதியின் பொறுப்புக்கு மேலதிகமாக பாதுகாப்பு, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள், சமுர்த்தி அபிவிருத்தி, தொழில்நுட்பம் மற்றும் மகளீர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பொறுப்புக்களும் ஜனாதிபதியிடமே உள்ளன.

இதன் காரணமாக ஜனாதிபதிக்கு அதிகளவான பொறுப்புக்கள் அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளமையின் ஊடாக, பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளில் குறைவினை காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நாடு நெருக்கடிகளை எதிர்நோக்கும் போது அரசாங்கம் இராஜாங்க அமைச்சர்களை நியமித்திருப்பது பொருத்தமான விடயமல்ல என சிலர் கூறுகின்றனர்.

எனினும், இம்முறை இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது ஜனாதிபதி, இராஜாங்க அமைச்சர்களை நியமித்தாலும் வழமை போன்று சகல வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெளிவாக குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மட்டுமே உரித்துடையவர்களாவர். மேலும், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒரு வாகனம் மட்டுமே கிடைக்கும்.

எனவே, நாட்டின் வளங்களை தேவையில்லாமல் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையானது சர்வதேச ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு இன்றியமையாததாகும். எனவே, நிலையான அரசாங்கத்தை நடத்துவதற்கு, வலுவான அமைச்சரவை அவசியமாகும்.

ஒவ்வொரு அமைச்சிலும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டமானது மிகவும் விசாலமானதாகும். எனவே, அந்த பணிகளை ஒரு அமைச்சரால் மாத்திரம் தனியாக நிறைவேற்ற முடியாது.

எனவே, இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனினும், கொவிட் தொற்று ஆரம்பித்த நாள்முதல், நான் தனிப்பட்ட முறையில் அமைச்சர் சம்பளத்தைப் பெறவில்லை. அந்த பணத்தை நான் கொவிட் நிதியத்திற்கே வழங்கினேன். இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கின்ற சம்பளம் மாத்திரமே எனக்கு கிடைக்கின்றது.

நாட்டை தற்போதுள்ள நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். புதிதாக பதவியேற்றுள்ள இராஜாங்க அமைச்சர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். எனவே, இந்த நியமனத்தில் சிறப்பு சலுகைகள் அல்லது பொது நிதியை தவறாக பயன்படுத்த இடம் கிடைக்காமையினால் இந்த நியமனங்களில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *