நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில், இரு சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ள இரு வழக்குகள் தொடர்பில், எதிர்வரும் 13 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
புத்தளம் மாவட்ட, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, நீதிமன்றை அவமதித்ததாக, அரசியலமைப்பு விதிவிதாங்களின் கீழ் சட்டத்தரணிகளான விஜித்த குமார மற்றும் பிரியலால் சிரிசேன ஆகியோர் இரு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த இரு வழக்குகளும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான் நீதிபதி ஆர். குருசிங்கவை உள்ளடக்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவை நேரில் மன்றில் ஆஜராக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்தது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்களை தாக்கியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், சனத் நிஷாந்த சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் இன்னமும் நிறைவடையாத நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறான நிலையில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி அன்று, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை குறித்து, குறிப்பாக நீதித்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்த குறித்த கருத்துக்கள் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் உள்ளதாக என மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இந்த கருத்துக்கள் நீதித்துறைக்கும், நீதித்துறை உத்தியோகத்தர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் கருத்துக்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். .
அதனால் அரசியலமைப்பின் 105(3) உறுப்புரையின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.