Saturday 18 March 2023

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு புதிய தீர்மானத்தை முன்வைப்பது இன்றியமையாதது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் குறித்து இணையனுசரணை நாடுகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்தவேண்டுமெனில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டுமென்ற விடயத்தை உள்ளடக்கிய புதிய தீர்மானத்தை முன்வைப்பது அவசியமானதாகும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் குறித்து ஜெனிவாவில் இணையனுசரணை நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46ஃ1 தீர்மானத்தில் காணப்படும் குறைபாடுகள், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள், அதில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் மற்றும் அத்தீர்மானம் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் அதிருப்தி ஆகியன குறித்து கடந்த 2021 ஜனவரி 15 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட கூட்டுக்கடிதம் மற்றும் கடந்த 2021 பெப்ரவரி 24, 2021 செப்டெம்பர் 8, 2022 பெப்ரவரி 25 ஆகிய திகதிகளில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களில் சுட்டிக்காட்டியிருந்ததாக மேற்குறிப்பிட்ட கடிதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பில் 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்போது 18 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், இக்காலப்பகுதியில் தாம் ஏற்கனவே வெளியிட்ட எச்சரிக்கைகள் ஒவ்வொன்றும் உண்மையென்று நிரூபணமாகியிருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாத்தடைச்சட்டம் ஏற்புடையதன்று எனவும் அச்சட்டம் குறைந்தபட்சமாகவேனும் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும் நீதியமைச்சர் உள்ளடங்கலாக அனைத்து அமைச்சர்களும் தெரிவித்திருக்கின்ற போதிலும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணைகளோ இன்றி தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அண்மையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகள் அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் எவ்வித மாறுதல்களையும் ஏற்படுத்தாது என்றும், அத்திருத்த முன்மொழிவுகள் இலங்கையின் சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதில் அரசாங்கம் உண்மையிலேயே அக்கறை காண்பிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘நாம் ஏற்கனவே கடந்த 2021 ஜனவரி 15 ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தவாறு தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உள்ளடங்கலாக அனைத்துக் குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான தீர்மானமொன்றை ஐ.நா பாதுகாப்புச்சபையில் முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை அச்சபையில் அங்கம்வகிக்கும் இரண்டு நாடுகளை உள்ளடக்கிய இணையனுசரணை நாடுகள் மேற்கொள்ளவேண்டும்’ என்று இக்கடிதத்தில் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட தமிழ்த்தரப்பினர் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தும் வகையிலான தீர்மானமாக இருக்கவேண்டுமெனில், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்தவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கிய புதிய தீர்மானமான அமையவேண்டியது அடிப்படையான விடயமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *