அமெரிக்காவின் P 627 என்று அழைக்கப்படும் ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பல் அமெரிக்காவின் சியெட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, குறித்த ஆழ்கடல் ஊடுருவல் கப்பலானது எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
அமெரிக்காவினால் இலங்கை கடற்படைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையிலேயே கப்பல் இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கடற்படையின் செயற்பாட்டு தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நோக்கி கடந்த 03ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
இந்த கப்பல் குறைந்தது 14,000 எம்.என் தாங்கு திறன் கொண்ட ஊடுருவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது.
115 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலானது அதிகபட்சமாக 29 நாடிகள் வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 187 பேர் உள்ளடங்கக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கப்பலானது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.