தமது தேசத்தின் விடுதலைக்காய் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு தாயக தேசங்களில் உணர்வெளிச்சியோடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தாயக தேசம் எங்கும், சிவப்பு – மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தவகையில்,தாயகம் எங்கும் 30 இற்கும் அதிகமான துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டதோடு அவற்றில் ஆயிரக்கணக்கான மக்களும் பங்கெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில், யாழ் பல்கலைக்கழக வளாகம், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு முன்றல், வடமராட்சி, கோப்பாய், சாட்டி முதலிய இடங்களில் மிகவும் எழுச்சி பூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
அதேபோல, கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் உள்ளடங்கலான துயிலும் இல்லங்கள், முல்லைத்தீவின் அளம்பில்,முள்ளிவாய்க்கால் முதலிய துயிலும் இல்லங்கள், மன்னார் ஆட்க்காட்டி வெளி துயிலும் இல்லம் என அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரால் நிறைந்திருந்தன.
அதேபோல, வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் பெருமளவான மாவீரர்களின் உறவுகள் முன்னிலையில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
இதன்போது மாலை 6.05மணிக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு மணி ஒலிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அத்தோடு, பலாலி விமானப்படை தாக்குதலில் வீரகாவியமான கரும்புலி மேயர் ஜீவரஞ்சனின் தாயாரால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
அதேநேரம், திருகோணமலை மாவட்ட துயிலும் இல்லங்களிலும் சிறப்பான முறையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
தாயகம் போலவே, புலம் பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வு பூர்வமாக இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.