இரத்தினபுரி நிவிதிகல மரபான பிரதேசத்தில் பேருந்தை செலுத்திய சாரதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இஷங்க கருணாரத்ன என்ற 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாரதி பேருந்தை செலுத்தியபோது ஏற்பட்ட மாரடைப்பினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாததால் பேருந்தானது கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணையின் போதே சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு எட்டு மணியளவில் இரத்தினபுரியில் இருந்து நிவித்திகல வரை பேருந்தின் கடைசிப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பயணிகளை இறக்கி விட்டு பேருந்து உரிமையாளர் வீட்டிற்கு செல்வதற்காக மாரப்பனை நோக்கி பயணித்த போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் போது சாரதியினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்டு பக்கம் பேருந்து திசை மாறி சென்றதாகவும், எனினும் அவர் அவ்வாறு செல்ல விடமால் தடுத்து இடது பக்கம் திருப்பும் போது பேருந்து கடை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் நடத்துனர் கிரிஷாந்த விசாரணையின் போது சாட்சியமளித்துள்ளார்.