2022 ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும், தமிழர் தாயக பிரதேசங்கள் முழுவதும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில், யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு முன்றலிலும் மாவீரர் வார தொடக்கநாளில் இருந்தே அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில்,மாவீரர் நாளான இன்று மேலும் சில இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், அச்சுவேலி பகுதியில் இருந்த மாவீரர் நினைவிடத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
அச்சுவேலி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவிடம், யுத்த காலத்தில் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டிருந்தது.இடித்தழிக்கப்பட்ட நினைவிடத்திலேயே சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி, மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அப்பகுதி இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை,யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியால் பருத்தித்துறை – நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லமும் 2022 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் அணிதிரண்டு வருமாறும் பணிக்குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் சிறிலங்கா இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துயிலும் இல்ல வளாகத்திற்கு அருகில் இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல கிளிநொச்சியின் கனகபுரம் உள்ளிட்ட துயிலும் இல்லங்களும் குறித்த பகுதி மக்கள் மூலம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மன்னாரிலுள்ள துயிலும் இல்லங்கள்,முழங்காவில் துயிலும் இல்லம் முதலியவையும் அஞ்சலி நிகழ்வுக்களுக்காக தயார் நிலையில் உள்ளன.
இதேவேளை,கிழக்கு மாகாணத்திலும் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பல்வேறுபட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.