தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் நேற்றயதினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மறுவாழ்வு முகாமிற்கு பொறுப்பான தனித்துணை ஆட்சியர், தமக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி தொடர்ந்து பல மணி நேரம் முகாம் நுழைவாயிலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களிடம் அப்பகுதிக்கான ஆட்சியர் கடுமையாக நடந்து கொள்வதும் அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மறுப்பதும் , அங்கு இலங்கைத் தமிழர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை வழங்க லஞ்சம் கேட்பதும் பலகாலமாக நீள்வதாக மண்டபம் மறு வாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.
இது குறித்து மேலதிகாரிகளிடம் பல முறை முறைப்பாட்டு மனு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான தீர்வுகள் கிடைக்காத காரணத்தினால் நேற்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், போராட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள்பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு முகாமிற்குள் சென்றுள்ளனர்.