போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக நாடளாவிய ரீதியாக உள்ள சகல பாடசாலைகளிலும் அடுத்த மாதம் முதல் சிறப்பு சோதனைகள் இடம்பெறுமென என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று 07 ஆம் திகதி புதன்கிழமை சுயாதீன உறுப்பினரான அத்துரலிய ரத்தின தேரர் முன்வைத்த நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். ஹெரோயின் என்ற போதைப்பொருள் முதல் தற்போது ஐஸ் வகை போதைப்பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவதாக அறியமுடிகிறது.
இவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். இதனால் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூற்று தொடர்பில் பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிட்டதாவது,
போதைப் பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளன .அதற்கான சுற்றறிக்கைகள் மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஊடாக அனுப்பப்படும்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மாணவர்கள் புனர்வாழ்வு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்னர்.இந்தசிறப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரும் உள்வாங்கப்படுவர் என்றார்.