Saturday 18 March 2023

பாணின் விலையை அதிகரிக்குமாறு கோரி அச்சுறுத்தல் – யாழ்.மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கம்

யாழ்ப்பாணத்தில் பாணை அதிக விலைக்கு விற்குமாறு சிலர் அச்சுறுத்தல் விடுத்து அழுத்தங்களை பிரயோகிப்பதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் க. குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டும் என சில வெதுப்பாக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

யாழ்.மாவட்ட செயலக ஏற்பாட்டில் கோதுமை மா மற்றும் எரிபொருள் என்பன சலுகை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

அதனால் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை. இதனை கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்து இருந்தேன்.

நான் இன்று நேற்று வெதுப்பக தொழிலை ஆரம்பித்தவன் அல்ல. பல ஆண்டுகளாக பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழில் செய்தவன்.

தற்போதைய நிலையில் 200 ரூபாய்க்கு பாண் விற்பனை செய்வதனால் வெதுப்பக உரிமையாளர்களுக்கு எந்த பாதிப்போ நஷ்டமோ ஏற்பட்ட மாட்டாது.

சிறிய அளவிலான வெதுப்பக உற்பத்திகளை மேற்கொள்வோரே 200 ரூபாய்க்கு பாணை விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்து, விற்பனை செய்கின்றனர்.

ஆனால் சில பெரிய வெதுப்பக உரிமையாளர்கள் தமக்கு நட்டம் எனவும் , பாணின் விலையை அதிகரியுங்கள் என தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு , அழுத்தங்களை தருகின்றனர். அதிலும் ஒரு சிலர் அச்சுறுத்தும் முகமாகவும் கதைக்கின்றார்கள்.

சிலரின் தேவைக்காக நாமும் பாணின் விலையை அதிகரித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்க தயார் இல்லை. பாணின் விலையை 10 ரூபாய் குறைத்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு ஏதுவான நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *