இன்று (07) காலை புத்தளம் களப்பில் உரைப்பையொன்று சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டுள்ளதை புத்தளம் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இவ்வாறு உரைப்பை சோதனைக்குட்படுத்தப்பட்டபோது உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று உரைப்பையிலிட்டவாறு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து புத்தளம் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய திணைக்களத்தினருக்குத் தகவலை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சென்று உயிரிழந்த கடலாமையை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கடலாமைக்கு வைத்தியர் இசுருவினால் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த ஆமையின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கபட்டிருப்பதாகவும் ஆமையின் தலையில் பாரிய காயங்கள் காணப்பட்டதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த கடலாமையை இறைச்சிக்காக கொன்றிருக்கலாமெனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிப்பதாக இதன்போது தெரிவித்தனர்.
குறித்த கடலாமை 30 கிலோ எடைக் கொண்டதாகக் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.