பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ள, பெற்றோலிய உற்பத்திகள் ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலமானது, அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக வியாக்கியாணம் அளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷேட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று ( 8) ஆரம்பிக்கப்பட்டன.
உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்ணான்டோ தலைமையிலான, ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டன.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக, ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர்கள் சங்கமும், பெற்றோலிய கூட்டுத்தாபன நிறைவேற்று அதிகாரிகள் சங்கமும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
மனுவில் சட்ட மா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி புதன் கிழமை, பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள் ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால், மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்ஜன வாக்கெடுப்பும் அவசியம் என வியாக்கியாணம் அளிக்குமாறு மனுதாரர்கள் மனுக்களூடாக உயர் நீதிமன்றைக் கோரியுள்ளனர். .
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள் ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலமானது பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உயர் நீதிமன்றில், அதன் அரசிஒயலமைப்பு அனுகூலத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர்கள் சங்கம் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,
பாராளுமன்றுக்கு முன்மொழியப்பட்ட இந்த சட்ட மூலமானது, உரிமம் வழங்குவது தொடர்பான அனைத்து சட்டப்பூர்வ பாதுகாப்புகளையும் நீக்கி, தனது சொந்த விருப்பத்தின் பேரில் விதிக்கக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு நபர் அல்லது நிறுவனத்துக்கு தன்னிச்சையாக உரிமங்களை வழங்க அமைச்சருக்கு அதிகாரம் அளிப்பதாக சுட்டிக்காட்டி வாதங்களை முன் வைத்தார்.
இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டால், அது நியாயமற்ற போட்டியை உருவாக்குவதுடன் பக்கச் சார்பு தன்மையை ஊக்குவிப்பதாக அமையும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார். அந்த நிலைமைகள் உள்நாட்டு பெற்றோலிய தொழிற்துறை, எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, உள்ளிட்ட தேசிய பொருளாதாரத்தினை பாதிக்கும் எனவும் தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நேரடியாக இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதன் மூலம் மக்களின் இறையாண்மை மற்றும் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
அதனால் குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்ற பாராளுமன்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என வியாக்கியாணம் அளிக்குமாறு அவர் கோரினார்.
இதன்போது மற்றொரு விஷேட மனுவை முன் வைத்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவும் மன்றில் வாதங்களை முன் வைத்தார்.
உத்தேச சட்ட மூலத்தின் 2,3,4,6,7 ஆம் அத்தியாயங்கள் எரிபொருள் விநியோக குழு மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை அளிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா சுட்டிக்கடடினார்.
இந் நிலையில் குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை ( 9 வரை ஒத்தி வைக்கப்பட்டன. )