Saturday 18 March 2023

பொதுஜன பெரமுனவின் சிறைக்கைதியாகியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – குமார வெல்கம

பொதுஜன பெரமுனவின் சிறைகைதியாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ராஜபக்ஷர்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவி காலத்தை சிறந்த முறையில் முழுமைப்படுத்த வேண்டுமாயின் ராஜபக்ஷர்களும்,பொதுஜன பெரமுனவும் அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி முறையாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைக்கிறோம் என புதிய லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள புதிய லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 37 இராஜாங்க அமைச்சுக்கான நியமனங்களை வழங்கியுள்ளார்.எதிர்வரும் ஓரிரு நாட்களில் இந்த எண்ணி;க்கைக்கமைய அமைச்சரவை அமைச்சுக்கான நியமனமும் இடம்பெறும்.

இராஜாங்க அமைச்சுக்கான வரபிரசாதங்களை பெற்றுக்கொள்ள போவதில்லை என இராஜாங்க அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்,ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளத்தை பெறுவார்கள்.

உறுப்பினர் பதவிக்கான சம்பளத்திற்கும்,இராஜங்க அமைச்சுக்கான சம்பளத்திற்கும் இடையில் 15,000 ரூபா மாத்திரமே வேறுப்பாடு.

37 இராஜாங்க அமைச்சர்களுக்கான வாகனம் மற்றும் அவர்களுக்கான சேவையாளர்கள்,சேவையாளர்களுக்கும் வசதிகள் என வசதிகள் விரிவடைந்து செல்லும்.நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் 37 இராஜாங்க அமைச்சுக்கள் அவசியம் தானா? இவர்களுக்கு நிதி ஒதுக்கவே அரச வருமானத்தில் பெருமளவிலான பகுதியை ஒதுக்க நேரிடும்.

அமைச்சரவை அமைச்சுகளுக்காக பிரதி அமைச்சு நியமனங்களும் இடம்பெறாம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு செயற்படுவார் என எதிர்பார்க்கவில்லை.சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டோம்,இருப்பினும் தற்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களையும்,சுதந்திர கட்சியின் ஒருசில உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வகையில் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விருப்பத்தின் பிரகாரம் செயற்பட முடியாத சிறை கைதியை போல் உள்ளார்.இடைக்கால வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தேன்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ராஜபக்ஷர்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தினால் ராஜபக்ஷர்களும்,பொதுஜன பெரமுனவும் படுதோல்வியடையும்.

பாராளுமன்ற பலத்தை கைப்பற்றும் அரசியல் தரப்புடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சிறந்த முறையில் செயற்பட முடியும்.ஆகவே பொறுமையுடன் இருந்து பாராளுமன்றத்தை கலைப்பதே சிறந்த தீர்வாக அமையும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *