மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவான் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள் மற்றும் இறால்கள், நண்டுகள், பாம்பு உப்பட பல உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருவதாகவும் இந்த ஆற்றில் இறால் பண்ணையின் நச்சுத்தன்மை கொண்ட கழுவு நீர் கலந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு நீதிவேண்டும் என கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.கருணேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த ஆற்றில் உள்ள மீன்கள், நண்டுகள், பாம்புகள், உட்பட பல நீர்வாழ் உயிரினங்கள் கடந்த செவ்வாய்கிழமை முதல் இரண்டு தினங்களாக மர்மமான முறையில் திடீரென கரையொதுங்கி வருகின்றது.
இந்த சம்பவத்திற்கு ஆற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளின் நச்சுத்தன்மை கொண்ட கழுவு நீர் திறந்து விடப்படுவதால் மீன்கள் இறந்திருக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது என தெரிவிக்கப்படுகிறது. இந்த நாசகார செயலால் மீனவர்களின் மீன்பிடி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன் இனங்களும் அழிந்துள்ளது.
இந்த ஆற்றில் இருந்து இவ்வாறு ஒருபோதும் மீன்கள் இறந்து கரையொதுங்கியது அல்ல இருந்தபோதும் இது தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த அதிகாரிகள் உயிரிழந்த மீன்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த பிரதேச அதிகாரிகளின் பரிசோதனையில் எமக்கு நம்பிக்கையில்லை இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
இப் பிரதேசத்தில் சுமார் 320 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் இவர்களில் 250 குடும்பங்கள் வாவாதார தொழிலான நன்னீர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் இவ்வாறு மீன் இனங்கள் உயிரிழந்து கரையொதுங்கியதால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு நீதிவேண்டும் என அவர் தெரிவித்தார்.