முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.
நாட்டு மக்கள் ஏழ்மை நிலையில் உள்ள போது அரச தலைவர் எளிமையான முறையில் இருப்பது பயனற்றதாகும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெதிகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டதன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உரிய சட்ட நடவடிக்கையை எடுத்திருந்தால் நிலைமை சிறந்த முறையில் இருந்திருக்கும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்க எடுத்த துரிதகர செயற்பாட்டுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியல் ரீதியில் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அரசியல் கட்டமைப்பில் எதிர்பாராத வகையில் பலவீனமடைந்துள்ளோம்.
முறைமை மாற்றம் என குறிப்பிட்டுக் கொண்டு நபரை மாற்றிமைத்தமை வரலாற்று ரதீயில் செய்த பாரிய தவறாகும். நாட்டு மக்கள் ஏழ்மை நிலையில் உள்ள போது அரச தலைவர் எளிமையான முறையில் இருப்பது பயனற்றதாகும்.
சிறந்த அரசியல் முறைமை மாற்றத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமைத்துவம் வழங்கும். புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிக்கப்படும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தியுள்ளார்.
ஒருசில காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு எதிர்க்கட்சியினர் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக் கொள்வதை புறக்கணித்து வருகிறார்கள்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன அழுத்தம் பிரயோகிப்பதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.