மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை,யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு,பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும் எனவும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமெனவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.