வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு எதிர்கொள்ள நேரிடும் என, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதனடிப்படையில், 2023ஆம் ஆண்டின் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் இலங்கை இருளில் முற்றுமுழுதாய் மூழ்குவதற்கான சாத்தியக்ககூறுகள் தென்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், இப்போதிலிருந்து 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலும் மின் உற்பத்திக்குத் தேவையான 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் 38 கப்பல்கள் வர வேண்டி உள்ளதாகவும் இருப்பினும் இதுவரை 4 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் அவர் கூறியதோடு, ஐந்தாவது கப்பல் துறைமுகத்தில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக வரத் தாமதமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த 38 கப்பல்களும் எதிர்பார்த்திருக்கும் காலத்தினுள் வருவதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் இங்கு மின்வெட்டு ஏற்படும் எனவும் எதிர்வு கூறியுள்ளார்.
அவ்வாறு நிகழ்ந்தால் அது, வரலாற்றில் முதலாவது மிகப்பெரிய மின்தடையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.