சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு, வயிற்று வலியினால் அவதிப்பட்ட நிலையிலிருந்த 14 வயது சிறுமியை அவரது தாத்தா-பாட்டி அழைத்து சென்றுள்ளனர். அத்தோடு அவர் உணவு உண்ண முடியாமல் சிரமப்படுவதாகவும் அவர்கள் வைத்தியர்களிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் வயிற்றில் முடி இருப்பதனை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றில் இருந்து 3 கிலோ முடியை சீன மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
எதனால் இப்படி நேர்ந்தது என்பது குறித்து ஆராய்ந்த போது, அந்த சிறுமி தனது தலைமுடியை தானே பிடுங்கி சாப்பிட்டிருந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரது தலை வழுக்கை ஆகியுள்ளமையும் அறியப்பட்டுள்ளது.
இதேவேளை, வயிற்றுக்குள் சென்ற தலைமுடி செரிமானம் ஆகாமல் வயிற்றை அடைத்துக் கொண்டு இருந்துள்ளதனால், உணவு உள்ளே செல்ல வழியில்லாமல் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஏன் அந்த சிறுமி தனது தலைமுடியை தானே சாப்பிட்டிருக்கிறார் என்பதற்கான காரணத்தையும் மருத்துவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.
அதாவது, குறித்த சிறுமிக்கு, ‘பிகா’ எனப்படும் விநோத பழக்கம் இருந்துள்ளது.’பிகா’ எனப்படும் இந்தப் பழக்கம் உள்ளவர்கள், அசாதாரணமான ; சாப்பிடக் கூடாத பொருட்களை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள்.அதாவது, அழுக்கு, காகிதம், களிமண் போன்ற பொருட்களை விரும்பி உண்ணுவார்கள்.
இந்த சிறுமியை பொறுத்த வரையில், அப்பா,அம்மா வெளியூரில் வேலை பார்த்து வருவதால் சிறுமி தனது தாத்தா- பாட்டியுடன் வசித்து வருகிறார். ஆகவே,சரியான கண்காணிப்பு இல்லாததால் சிறுமிக்கு இந்தப் பழக்கம் இருந்ததை யாராலும் கண்டுபிடிக்க முடியமால் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்த முடி முழுவதும் அகற்றப்பட்டதோடு, சிறுமி அந்த விநோத பழக்கவழக்கத்தில் இருந்து மீள்வதற்கு தேவையான உளவியல் சிகிச்சைகளும் தற்போது வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.