இந்தியாவின்,மத்திய பிரதேச மாநிலத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.
பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை(7) மாலை தன்மய் சாஹூ என்ற 8 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தபோது, அப்பகுதியில் இருந்த சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். உடனிருந்த சிறுவர்கள் ஓடோடி பெரியவர்களிடம் தெரிவித்ததில், உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. இரவே மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்தோரும் சிறுவனை மீட்பதில் இணைந்தனர்.
சிறுவன் மூச்சு விடுவதை உறுதி செய்த அவர்கள், 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றின் 55 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதாக கணித்துள்ளனர். கிணற்றின் ஆழம் அதிகம் என்பதால் சிறுவன் மேலும் சறுக்கி செல்வது மீட்பு பணியை சவாலாக்கி வருகிறது.
சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சிறுவனைக் காப்பாற்றும் நடவடிக்கை கிட்டத்தட்ட 70 மணிநேரமாக நடந்துவரும் நிலையில், சோகத்தில் ஆழ்ந்துள்ள சிறுவனின் குடும்பத்தினர், விரக்தியில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளார்கள்.
இருந்தாலும் அவை எவற்றுக்கும் பதில் கூறப்படாத நிலையில், மாநில முதல்வரான சிவராஜ் சிங் சௌகான் மீட்பு நிலவரத்தை நிமிடந்தோறும் தனக்கு அறியத்தருமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சிறுவனின் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டுமாறு உள்ளூர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் உள்ளேன். சிறுவனின் நலத்துக்காக பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.