நாட்டில் நிலவும் குளிரான காலநிலையின் தாக்கத்தினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானில் 7 பண்ணையாளர்களின் 60 கால்நடைகளும் கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்நகர், நாகேந்திரபுரம், புண்ணை நீராவி , பூநகரி, கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் 20 பண்ணையாளர்களுக்கு சொந்தமான 45 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
அத்துடன்,கிளிநொச்சி புளியம்பொக்கனை கண்டாவளை , கல்மடு , மயில்வாகனபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடு,திருகோணமலை தோப்பூரிலும் 15 பண்ணையாளர்களின் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த இடங்களில் உள்ள பண்ணைகளில் மேலும் சில கால்நடைகள் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதாகவும், அந்த கால்நடைகளை காப்பாற்றும் வகையில் பிரதேச மக்கள் தீ மூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறு கால்நடை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.