யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் கடந்த 2019ம் ஆண்டு மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா தொற்று நிலைமைகளில் நாடு முடக்கநிலைக்கு சென்ற காரணத்தினால் கூடிய விரைவிலேயே அது மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிலைமை சீரானதும் அதனை மீண்டும் திறந்து வைப்பதற்கான, பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சொல்லப்பட்ட போதும் அவ்வாறான வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் மீள இயங்குநிலைக்கு திரும்புகின்றது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,எதிர்வரும் 12 ஆம் திகதி, யாழ்ப்பாணம் பலாலியிலிருந்து சென்னைக்கான விமானசேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், முதலாவது விமானம் அன்று காலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும் எனவும் மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு இங்கிருந்து விமானம் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தொடர்ந்து ஒவ்வொரு வாரத்திலும் நான்கு நாட்கள் இந்தச் சேவையை பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல்கள் அனைத்தும் வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் சுனிஸ் திஸநாயக்க அவர்களினால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விமான சேவைக்கான டிக்கற் வழங்கும் முற்பதிவு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.