Monday 20 March 2023

நடு வீதியில் யாழ் இளைஞன் தாக்கப்பட்டமை தொடர்பில் இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் காவல்துறையினருக்கும் இளைஞனுக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தையடுத்து அங்கு கடமையில் இருந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த காவல்துறையினர் , மானிப்பாய் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் குறித்த இளைஞனை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் குறித்து மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக குறித்த இளைஞனிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெறப்பட்டதும் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *