சட்ட விரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 20 பேர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – சம்பூர், கொக்கட்டி கடற்பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(5) அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, குறித்த 20 பேரையும் ஏற்றிச் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவை படகும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளை தடுக்கும் பொருட்டு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடல் மற்றும் கரையோர ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது .
இந்த கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் உட்பட16 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 01 பெண் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 03 பேர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.